வாஷிங்டன்: அமெரிக்காவில் பணியாற்றும் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையினர் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் வரியாக 15 பில்லியன் டாலரை அந்த நாட்டுக்குச் செலுத்தியுள்ளனர் என்று மத்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் ரஞ்சன் மத்தாய் தெரிவித்துள்ளார்.
இருதரப்பு உறவுகள் மற்றும் அணு உலை ஒப்பந்தம் குறித்து விவாதிக்க அமெரிக்கா சென்றுள்ள மத்திய வெளியுறவுத் துறைச் செயலர் ரஞ்சன் மத்தாய்.
சர்வதேச படிப்பினைகளுக்கான ஆய்வு மையத்தில் இன்று உரையாற்றுகையில் இதனை சுட்டிக்காட்டி அமெரிக்கா வருவதற்கான கட்டுப்பாடுகளையும் இந்தியர்களின் பங்களிப்பையும் விவரித்தார்.
மேலும் ரஞ்சன் மத்தாய் கூறியதாவது:
அமெரிக்காவில் பணியாற்றும் இந்திய தகவல் தொழில்நுட்பத்துறையினர் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 15பில்லியன் டாலரை வரியாக செலுத்தியுள்ளனர்.அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் விதத்திலும் நமது தகவல் தொழில்நுட்பத் துறையினர் பாதுகாப்பாக உள்ளனர்.
6 ஆண்டுகளுக்கு 20 ஆயிரம் பேராக இந்திய தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் எண்ணிக்கை இப்போது ஒரு லட்சத்துக்கும் அதிகமாக இருப்பதாக நாஸ்காம் மதிப்பிட்டுள்ளது.
விசா கட்டணமாக மட்டுமே 200மில்லியன் டாலரை இந்தியர்கள் அமெரிக்காவுக்கு செலுத்தி உள்ளனர். இருப்பினும் அவர்களுக்கான ஊதியம் மிகக் குறைவானது. இத்தகைய ஒரு பாரபட்சமான நிலைமையை மாற்ற இருதரப்பு உறவும் அவசியமானது.
விசா கட்டண உயர்வு, கடுமையான கட்டுப்பாடுகள் என பல தடைகள் இந்தியர்களுக்கு இருக்கிறது. இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவை வலுப்படுத்த வேண்டியதும் கட்டாயமாகும். இந்திய வர்த்தகர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவில் 26 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளனர்.
இந்தியாவிலும் உள்கட்டமைப்புக்கான அடுத்த ஐந்தாண்டுகளில் 1டிரில்லியன் டாலர் செலவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளில் மறுசீரமைப்பு நிச்சயம் தேவையானது என்றார்.
அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டுள்ள மத்தாய் அணு உலை ஒப்பந்தம், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் ஆகியவை குறித்தும் ஆலோசனை நடத்துகிறார். வெளியுறவுத் துறைச் செயலராக பதவியேற்ற பின் அவர் மேற்கொள்ளும் முதலாவது அமெரிக்கப் பயணம் இதுவாகும்.
No comments:
Post a Comment