புதுடில்லி:வீட்டுக் கடன்களுக்கான வட்டி மீதான வரித் தள்ளுபடி வரம்பை தற்போதுள்ள 1.5 லட்சத்திலிருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்த, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. வீட்டு வசதித் துறையை மேம்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
தற்போது வீட்டுக் கடன் பெற்றுள்ளவர்கள், அந்த கடன்களுக்காக செலுத்தும் வட்டியில் 1.5 லட்சம் ரூபாய் வரை வரித் தள்ளுபடி சலுகை பெறலாம். இது தவிர, அசலாகச் செலுத்தும் தொகையிலும் 1 லட்சம் ரூபாய் வரையிலான தொகைக்கு வரிச் சலுகை பெறலாம். தற்போது ஒவ்வொரு ஆண்டும், சொத்துக்களின் விலையும், வட்டி வீதமும் மாறிக் கொண்டே இருப்பதால், இந்த வரித் தள்ளுபடி வரம்பை மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
"வீட்டுக் கடன்களுக்கான வரித் தள்ளுபடி வரம்பை அதிகரிக்க வேண்டும்' என, தொழில் நிறுவனச் சங்கங்களும் கேட்டுக் கொண்டுள்ளன. "அதாவது வீட்டுக் கடன்களுக்கான வட்டி மீதான வரித் தள்ளுபடி வரம்பை 2.5 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும்' என, இந்திய தொழில் வர்த்தக சபை சம்மேளனம் கேட்டுக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், இந்திய தொழில் சம்மேளனமோ, "வீட்டுக் கடன்களுக்காக வரித் தள்ளுபடி வரம்பை 5 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும்' என, மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது. அதாவது, வீட்டுக் கடன் வட்டி மீதான வரித் தள்ளுபடி சலுகை வரம்பை, 3 லட்சமாகவும், அசலுக்கான வரித் தள்ளுபடி வரம்பை 2 லட்சம் ரூபாயாகவும் நிர்ணயிக்க வேண்டும் என, கோரியுள்ளது.
அதனால், வீட்டுக் கடன்களுக்கான வட்டி மீதான வரித் தள்ளுபடி வரம்பை 3 லட்சம் ரூபாயாக உயர்த்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. வரக்கூடிய பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம்.
No comments:
Post a Comment