புதுடில்லி: மத்திய அரசு, உணவுப் பொருள் பணவீக்கம் குறித்த அறிவிப்பை, வாரந்தோறும் வியாழக்கிழமை அறிவித்து வந்தது. இனி, உணவுப் பொருள் பணவீக்கம் குறித்த புள்ளி விவர வெளியீடு கைவிடப்படுவதாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, இந்த வாரம் முதல், உணவுப் பொருள் பணவீக்கம் வெளிவராது. அதேசமயம், மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும் பொதுப் பணவீக்கம் குறித்த அறிவிப்பு, எப்போதும் போன்று, மாதந்தோறும் வெளியிடப்படும். இதில், உணவுப் பொருட்கள், உணவு சாராத பொருட்கள், எரிபொருட்கள், தயாரிப்பு பொருட்கள் போன்றவற்றை உள்ளடக்கிய பணவீக்க புள்ளி விவரங்கள் வெளியிடப்படும் என, இந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதத்திற்கான பொது பணவீக்கம் குறித்த அறிவிப்பு, வரும் 14ம் தேதி வெளியிடப்படும்.இது குறித்து மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டத்தில், வாரந்தோறும் உணவுப் பொருள் பணவீக்கம் குறித்த அறிவிப்பு வெளியிடுவதை கைவிடும் வகையில் முடிவெடுக்கப்பட்டது. உணவுப் பொருள் பணவீக்கம் குறித்து, வாரந்தோறும் வெளியிடப்படும் புள்ளி விவரத்தில், அனைத்து பொருட்களின் விலை விவரம் குறித்த புள்ளி விவரங்களை துல்லியமாக கணக்கிட முடியவில்லை. இதன் காரணமாகவே, உணவுப் பொருள் பணவீக்கம் குறித்த வாராந்திர புள்ளி விவரம் கைவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜனவரி 14ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், உணவுப் பொருள் பணவீக்கம், 1.03 சதவீதம் என்ற அளவில் இருந்ததாக, கடந்த ஜனவரி 27ம் தேதி அறிவிப்பு வெளியானது. கடந்த டிசம்பரில், நாட்டின் பொதுப் பணவீக்கம், 7.47 சதவீதம் என்ற அளவில் குறைந்திருந்தது. இதையடுத்தே ரிசர்வ் வங்கி, அண்மையில், அதன் நிதி ஆய்வு அறிவிப்பில் வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதத்தை (சி.ஆர்.ஆர்) 0.50 சதவீதம் குறைத்து, 6 சதவீதத்திலிருந்து, 5.50 சதவீதமாக குறைத்தது.மத்திய அரசு, கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், மொத்த விலைக் குறியீட்டு எண் கணக்கிடப்படுவதற்கான அடிப்படை ஆண்டை, 1993-94லிருந்து, 2004-05 ஆக மாற்றி அமைத்தது. இதையடுத்து, முதலில், பணவீக்கம் கணக்கிடுவதற்கான, 435 பொருட்களின் எண்ணிக்கை, பின்பு, 676 ஆக அதிகரிக்கப்பட்டது.இதே போன்று, கடந்த 2009ம் ஆண்டு அக்டோபர் வரை, நாட்டின் பணவீக்கம் குறித்த அறிவிப்பு, வாரந்தோறும் அறிவிக்கப்பட்டு வந்தது. பின்பு, இது, மாதம் ஒரு முறை என மாற்றியமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment