புதுடில்லி : நடப்பு 2012ம் ஆண்டு, ஜனவரி மாதம் துவக்கம் முதல், நாட்டின் பங்கு வர்த்தகம் சிறப்பாக உள்ளது. இதையடுத்து, பரஸ்பர நிதி திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடும் உயர்ந்துள்ளது. சென்ற ஜனவரி மாதத்தில், பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 6 லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
புள்ளிவிவரம் : இது, சென்ற டிசம்பர் மாதத்தில் நிர்வகிக்கப்பட்ட சொத்து மதிப்பை விட, 8 சதவீதம் அதிகம் என, கிரிசில் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், சென்ற டிசம்பர் மாதத்தில், பங்கு வர்த்தகத்தில் ஏற்பட்ட சுணக்க நிலையால், பரஸ்பர நிதி திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு குறைந்திருந்தது என்பதுடன், பல நிறுவனங்கள் முன்கூட்டிய வரியை செலுத்துவதற்காக, இத்திட்டங்களில் மேற்கொண்டிருந்த முதலீட்டை வெகுவாக விலக்கிக் கொண்டன. இதனால், சென்ற டிசம்பர் மாதத்தில், பரஸ்பர நிதி நிறுவனங்களால், நிர்வகிக்கப்பட்ட சொத்து மதிப்பு குறைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி மாதத்தில் மட்டும், பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, அதற்கும் முந்தைய மாதத்தை விட, 47 ஆயிரத்து 700 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. சென்ற ஜனவரி மாதத்தில், நிதிச் சந்தையில், பரஸ்பர நிதி நிறுவனங்களால், நிர்வகிக்கப்பட்ட சொத்து மதிப்பு, 26 ஆயிரத்து 400 கோடி ரூபாய் உயர்ந்து, 1 லட்சத்து 48 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, டிசம்பர் மாதத்தில், 1 லட்சத்து 21 ஆயிரம் ரூபாயாக இருந்தது.
பங்கு வர்த்தகம் : கணக்கீட்டு மாதத்தில், பங்கு வர்த்தகம் நன்கு இருந்ததால், பரஸ்பர நிதி நிறுவனங்கள், பங்குச் சார்ந்த முதலீட்டுத் திட்டங்களில் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு, 11 சதவீதம் வளர்ச்சியடைந்து, அதாவது, 18 ஆயிரத்து 400 கோடி ரூபாய் அதிகரித்து, 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகு, சென்ற ஜனவரி மாதத்தில், பங்கு வர்த்தகம் நன்கு இருந்தது. அம்மாதத்தில், மட்டும் "சென்செக்ஸ்' 15 சதவீதம் அதிகரித்திருந்தது. இதையடுத்து, பங்கு சார்ந்த பரஸ்பர நிதி நிறுவனங்கள், தங்களின் அளவீடாக கடைபிடிக்கும் எஸ் அண்டு பி, சி.என்.எக்ஸ். நிப்டி, குறியீட்டு எண், 12 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. மேலும், 2010ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு, சென்ற ஜனவரியில், "கில்ட் பண்ட்' திட்டங்களில், மேற்கொள்ளப்பட்ட முதலீடு, 521 கோடி ரூபாயாக உயர்ந்திருந்தது.
அதேசமயம், வருவாய் சார்ந்த பரஸ்பர நிதித் திட்டங்களிலிருந்து, சென்ற ஜனவரி மாதத்தில், 2,900 கோடி ரூபாய் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு, சென்ற ஜனவரி மாதத்தில் தான், வருவாய் சார்ந்த பரஸ்பர திட்டங்களிலிருந்து, இந்த அளவிற்கு தொகை வெளியேறி உள்ளது. ஏனெனில், பல முதலீட்டாளர்கள், குறுகிய கால அடிப்படையிலான முதலீட்டுத் திட்டங்களுக்கு பதிலாக, அதிக வருவாய் அளிக்கக் கூடிய, நீண்ட கால அடிப்படையிலான முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு மேற்கொண்டது தான் இதற்கு காரணம் என, கிரிசில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய திட்டங்கள் : நிலையான அளவில் வருவாய் அளிக்கக் கூடிய புதிய பரஸ்பர நிதித் திட்டங்களில், முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதையடுத்து, இப்பிரிவில், சென்ற ஜனவரி மாதத்தில் மட்டும், குறிப்பிட்ட கால அளவு கொண்ட, 49 புதிய பரஸ்பர நிதித் திட்டங்கள் வெளிவந்தன.
இதன் வாயிலாக, 7,844 கோடி ரூபாய் திரட்டி கொள்ளப்பட்டது. இவை தவிர, சென்ற ஜனவரி மாதத்தில், மேலும் மூன்று புதிய பரஸ்பர நிதித் திட்டங்கள் வெளியிடப்பட்டன. இதன் வாயிலாக, 657 கோடி ரூபாய் திரட்டப்பட்டது.
சென்ற ஜனவரி மாதத்தில், நிதிச் சந்தை, கில்டு பண்டு, கோல்டு ஈ.டி.எப்., ஆகிய மூன்று பரஸ்பர நிதித் திட்டங்களிலுமாக மேற்கொள்ளப்பட்ட நிகர முதலீடு முறையே, 26 ஆயிரத்து 429 கோடி, 521 கோடி மற்றும் 82 கோடி என்றளவில் இருந்தது.
No comments:
Post a Comment